நெருக்கடியான சந்தர்ப்பங்களில் குறிப்பாக இயற்கை பேரழிவுகள், யுத்தங்கள் அல்லது தொற்றுநோய்கள் மக்கள் மத்தியில் பரவும் போலியான செய்திகள் (disinformation) குறித்த நிலைமையை மேலும் ஆபத்தானதாக மாற்றுகின்றன.
இலங்கையர்களுக்கு இதற்கு ஏராளமான அனுபவங்கள் உள்ளன. Covid-19 தொற்றுநோய் பரவிய காலகட்டங்களில் போலியான உள்நாட்டு மருந்து வகைகள், 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலின் போது தவறான இறப்பு எண்ணிக்கைகள் மற்றும் போலியான வெடிப்பு பிரச்சாரங்கள், அண்மையில் Cyclone Dithwah-இன் போது ‘கொத்மலை அணை உடைந்தது, கம்பளை - அம்புலுவாவ மலை சரிந்தது’ போன்ற போலியான செய்திகள் என்பன வெவ்வேறு காலகட்டங்களில் பெரும் பீதியை ஏற்படுத்திய ஒரு சில சம்பவங்களாகும்.
இவை உடனடி பதற்றத்தை (panic) உருவாக்கி மேலும் பல உயிர் மற்றும் பொருட்சேதங்களை ஏற்படுத்தக் கூடியவை. சில சமயங்களில் இவை அறியாமையால் அல்லது, திட்டமிட்ட திசைதிருப்பலால் (weaponized misinformation) நிகழ்கின்றன.
அதேபோல் இதற்கு ஒரு மறுபக்கமும் உண்டு. அதாவது உண்மையான தகவல்களைப் புறக்கணிப்பதும் (neglect of real information) போலியான செய்திகளைப் போன்றே ஆபத்தானவை. போலி செய்திகள் ஒரு வைரஸ் போல வேகமாகப் பரவும், உண்மை ஒரு மெதுவாக எரியும் விளக்கு – அதை அணைத்தால் இருட்டு நீடிக்கும்.
போலியான செய்திகளின் உடனடி ஆபத்து
கடந்த வருடம் நவம்பர் மாதம் 28ஆம் திகதி Cyclone Dithwah இலங்கையைத் தாக்கியபோது, கிட்டதட்ட 635 பேர் உயிரிழந்ததுடன் 2 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டார்கள். மேலும் UNDP நிறுவனத்தின் தரவுகளின் படி 1.1 மில்லியன் ஹெக்டயார் நிலம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதுடன் 70,000 விற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயந்துள்ளனர். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் சமூக வலைத்தளங்களில் போலியான மற்றும் மக்களை தவறான முறையில் வழிநடத்தக்கூடிய பதிவுகள் ஏராளமாக காணப்பட்டன. அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் குறிப்பாக Online Safety Act No. 09 of 2024 போன்றவைகள் காணப்பட்டாலும், இந்த போலியான செய்திகள் குறித்த சந்தர்ப்பத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் மிக அதிகம்.
இலங்கை குற்றப்புலனாய்வுப் திணைக்களம் (CID) Dithwah பேரிடரைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட 57 போலி செய்திகள், தவறான தகவல்கள் (disinformation), மற்றும் வதந்திகளை அடையாளம் கண்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் (Public Security Ordinance) மற்றும் அவசரகால விதிமுறைகளின் கீழ், அமைதியைக் சீர்குலைக்கக் கூடிய தவறான தகவல்களைப் பரப்புவது இலங்கையின் சட்டத்தின் அடிப்படையில் தண்டனைக்குரிய குற்றம் என பொலீஸ் ஊடகப் பேச்சாளர் ASP F. U. Wootler தெரிவித்திருந்தார்.
உண்மையைப் புறக்கணிப்பதன் நீண்டகால ஆபத்து
மிக அண்மையில் ஏற்பட்ட Dithwah புயலினை உதாரணமாக எடுத்துக் கொண்டால், புயலின் உடனடி செய்திகள் (இறப்பு எண்ணிக்கை, மண்சரிவு காட்சிகள்) என்பன viral ஆனபோது ஊடகங்கள் அவை மீது கவனம் செலுத்தின. பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று மக்களின் கருத்துக்களை ஒளிபரப்பினார்கள். இறந்தவர்களின் குடும்பத்தாரின் அனுபவங்களையும் உடைந்து மண்ணோடு சரிந்த நிலையில் காணப்பட்ட வீடுகள் மற்றும் பாதைகள் என்பவற்றின் காட்சிகளையும் ஒளிபரப்பினார்கள்.
ஆனால் தற்போது மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் ( 2026 மார்ச்) இன்னும் நாடு பூராக பல பிரதேசங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை அவ்வாறே தான் உள்ளது. குறிப்பாக இலங்கையின் மலைநாட்டு பிரதேசங்களில் வாழ்கின்ற மலையக தமிழ் மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மாத்தளை, பதுளை, நுவரெலியா மற்றும் நாவலப்பிட்டிய போன்ற பிரதேசங்களில் குடியிருப்புகளை இழந்து முகாம்களில் வாழ்கின்ற மக்களை நேரடியாக சென்று சந்தித்தோம்.
- நாவலபிட்டிய, தொலொஸ்பாகே - பரகல தோட்டத்தில் 13 பேர் இறந்துள்ளார்கள். அங்கிருந்து 56 லைன் வீடுகளும் அகற்றப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் அவர்களுக்கு வீடுகளோ காணிகளோ எதுவும் வழங்கப்படவில்லை. அது பற்றிய பேச்சே இல்லை. இறந்தவர்களுக்கு அப்பால் உயிர் தப்பியவர்களின் மருத்துவ செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் இன்று அம்மக்கள் கஷ்டப்படுகின்றார்.
- Hali-Ela பகுதியில், வீடு காணி மற்றும் சொந்த உறவுகள் என அனைத்தையும் இழந்த நிலையில் தற்காலிக முகாம்களில் ஒரு சில குடும்பங்கள் தங்கியுள்ளார்கள். அவர்கள் தங்களுடைய புதையுண்ட வீடுகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக புயல் வருவதற்கு முன்னர் வங்கிகளிடமிருந்தும், நுண்கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்தும் பெற்றுக்கொண்ட கடன்கள் இன்னும் அப்படியே உள்ளன. அவற்றை வசூலிப்பதற்காக குறித்த நிறுவனங்களின் முகவர்கள் அகதிகளாக தற்காலிக முகாம்களில் வசிக்கின்ற இந்த மக்களின் தேடி வந்து அவர்களிடம் பணம் தருமாறு வற்புறுத்துகின்ற சம்பவங்களை இதுபோன்று பிரதேசங்களில் மேற்கொண்ட கள விஜயங்களின் போது காணக்கூடியதாக இருந்தது.
- அரசு 25,000 ரூபாய் 50,000 ரூபாய் மற்றும் 50 லட்சம் ரூபாய் என பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினாலும் மலையக மக்களுக்கு இன்னும் அவ்வாறான எந்த ஒரு சலுகையும் கிடைத்திருக்கவில்லை. வீடுகள் இவர்களுக்கு சொந்தமாக இல்லை என்பதால் இம்மக்கள் மீண்டும் மீண்டும் வறுமைக்கும் இயலாமைக்கும் தள்ளப்பட்டு வருகின்றார்கள்
- Dithwa புயலைத் தொடர்ந்து தொடர்பாடல்கள் அனைத்தும் சிங்கள மொழியில் மாத்திரம் நடைபெற்றதால் தமிழ் மொழி மாத்திரம் தெரிந்த மலையக மக்கள் அதிகாரிகள் தங்களுக்கு என்ன கூறுகின்றார்கள் என்பதை கூட அறியாமல் மிகவும் கஷ்டப்படுகின்ற காட்சிகளை களஞ்சியங்களின் போது அவதானித்தோம்.
இவைதான் 200 ஆண்டுகளாக ஒரு சென்டிமீட்டர் கூட நிலம் இல்லாமல் மிகவும் ஆபத்தான முறையில் பழைய லயன் வீடுகளில் வாழ்ந்த மலையக மக்களின் கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளில் யதார்த்தம்.
ஆனால் பிரதான ஊடகங்கள் இவை தொடர்பில் மௌனமாகவே இருக்கின்றது. இறந்தவர்களுடைய எண்ணிக்கையை வட்டமிட்டு காட்டுகின்ற ஊடகங்கள் உயிர்த்தப்பியவர்களின் வாழ்க்கையின் யதார்த்தத்தை கூற மறுத்துள்ளார்கள்.
ஒரு சில அரசுக்கு சார்பற்ற ஊடகங்கள் தேவைகள் வரும்போது மாத்திரம் இவர்களின் பிரச்சினைகளை பக்கச் சார்புடன் காட்டுகின்ற அதே வேலை அரசுக்கு சார்பான ஊடகங்கள் ஒரு சிறிய பகுதியை மாத்திரமே காட்டி ‘ஒட்டுமொத்த மக்களுடைய பிரச்சினைகளும் தீர்க்கப்படுள்ளன’ போன்று அறிக்கை இடுவதை நாங்கள் அவதானிக்கின்றோம்.
அனர்த்தங்கள் மற்றும் விபத்துகளின் போது ஊடகங்கள் இறந்தவர்களின் எண்ணிக்கை, எவ்வாறு ஏற்பட்டது போன்ற பரபரப்பான விடயங்களுக்கு கொடுக்கின்ற முன்னுரிமை ஏனைய நீண்டகால பிரச்சினைகளுக்கு கொடுக்க மறுக்கின்றார்கள். குறிப்பாக Dithwah அனர்த்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்டு தங்களுடைய சொத்துக்கள் இருப்பிடங்களை இழந்து முகாம்களில் வாழ்கின்ற மக்களின், சுகாதார பிரச்சனைகள், உணவுப் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் முகம் கொடுக்கின்ற உளவியல் ரீதியான சவால்கள் போன்றன புறக்கணிக்கப்படுகின்றன.
ராகலை, வெளிமட போன்ற பிரதேசங்களில் பாடசாலைகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நாங்கள் சென்று சந்தித்தபோது மிகச்சிறிய ஒரு பாடசாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதை அவதானித்தோம். கிலோக் கணக்கில் உணவுப்பொருட்கள் உண்பதற்கு இருந்தாலும் அங்கே இருக்கின்ற சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
மேலும் மாத்தளை, கம்மடுவ பிரதேசத்திற்கு சென்று அங்கிருந்த மக்களை சந்தித்தபோது பிரதேசத்தில் உள்ள பிள்ளைகள் எவருமே போக்குவரத்து வசதிகள் இல்லாததன் காரணமாக அனர்த்தத்திற்கு பின்னர் பாடசாலைக்கு செல்லவில்லை, என்ற விடயத்தை அவதானிக்க கூடியதாக இருந்தது. ‘விரும்பிய பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்க்கலாம்’ என அரசாங்கம் கூறினாலும் உரிய போக்குவரத்து வசதிகள் இல்லாமை யதார்த்த பிரச்சினையாக அங்கே இருந்தது.
அரசாங்கத்தின் கொள்கைகளையும் கொடுப்பனவுகளையும் கோடிட்டு காட்டுகின்ற ஊடகங்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களின் அடிப்படை பிரச்சினைகளை ஒரு போதும் கண்டு கொள்வதில்லை.
2025 மே 11 அன்று அதிகாலை Kotmale, Ramboda, Gerandi Ella அருகே நடந்த பேருந்து விபத்தும் மற்றுமொரு சிறந்த உதாரணமாகும். கிட்டத்தட்ட நூறு அடி பள்ளத்தில் விழுந்து 21 பேர் உயிரிழந்து மேலும் 35 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த அந்த அனர்த்தமானது, கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற மிகப்பெரிய ஒரு பேருந்து விபத்து ஆகும்.
ஆனால் இந்த விபத்தை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்ட போலியான செய்திகள் குறித்த அனர்த்தத்தை விட அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தின. சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்களின் பின்னர் குறித்த பிரதேசத்திற்கு சென்று பொலீசார் வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் ஊர் மக்களை சந்தித்து நாங்கள் சம்பவம் பற்றி வினவினோம்.
போலீசார் தாமதமாகவே வந்தார்கள் என்ற செய்தி போலியானது. சம்பவம் நடைபெற்று 20 நிமிடங்களுக்குள் போலீஸ் அதிகாரிகள் அங்கே வந்துள்ளார்கள். இதனை கொத்மலை போலீஸ் நிலையத்தின் தலைமை அதிகாரி விஜித ரத்நாயக ஆதாரங்களுடன் காட்டினார்கள். அதேபோல் வைத்தியசாலையில் மருந்துகளே இல்லை என்ற செய்தியும் போலியானது, என்பதை வைத்தியசாலைக்கு சென்று அங்கிருந்த ஊழியர்கள் தாதிமார் மற்றும் வைத்தியர்களை சந்தித்து மருந்துகளை நேரடியாகவே பார்த்தோம். எனவே அந்தத் தகவலும் போலியானது என்பதை அப்போது உறுதி செய்ய முடிந்தது.
அதேபோல் ‘சுவசரிய அவசர அம்பியூலன்ஸ் சேவை தாமதமாக வந்தது’ என்ற செய்தியும் போலியானது, என்பதை குறித்த பிரதேசத்துக்கு பொறுப்பான சுவசரிய சேவையின் ஊழியர்களை சந்தித்தபோது அறிய முடிந்தது. அத்துடன் ஊர் மக்களை சந்தித்ததில் மேலும் பல போலியான செய்திகளின் உண்மை தன்மையை அறியக்கூடியதாக இருந்தது.
ஆனால் குறித்த விபத்து நடைபெற்று ஒரு சில மணித்தியாலயங்களில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட மேலே குறிப்பிட்ட போலியான செய்திகள் மக்கள் மத்தியில் உடனடியாக பரவல் அடைந்து எந்தவித ஆதாரமும் இல்லாத குறித்த போலியான செய்திகளை நம்பி வைத்தியசாலை அதிகாரிகள் போலீஸ் உத்தியோகஸ்தர்கள் மற்றும் அம்பியுலன்ஸ் சேவை சாரதிகள் என அனைவருமே மக்களால் தூற்றப்பட்டார்கள். இத்தனைக்கும் காரணம் ஆதாரங்கள் இல்லாமல் ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பதிவுகளே ஆகும்.
தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களின் அல்கரிதம் ‘algorithm’ போன்றே பிரதான ஊடகங்களும் பரபரப்பான செய்திகளுக்கு மாத்திரமே முன்னுரிமை கொடுப்பதை அவதானிக்க முடியும். ஏற்கனவே கூறியதைப் போல் போலியான செய்திகளை பகிர்வதைப் போன்று உண்மையை மறைத்து அல்லது உண்மையை தவிர்த்து அறிக்கையிடுதல் என்பதும் ஆபத்தானது.
ஊடக நம்பிக்கை சரிவு மற்றும் தீர்வுகள்
இன்று ஒரு சில ஊடகவியலாளர்களும் தொலைக்காட்சி செய்தி மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் “Influencers” களாக மாறியுள்ளார்கள்.
ஒரு சில ஊடக நிறுவனங்களை விட சமூக வலைத்தளங்களில் இவர்களைப் பின்தொடர்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகம்.
சிலர் தங்களுடைய கருத்துக்களை (opinions) உண்மையான செய்திகள் போல் (facts) பதிவு செய்கின்றார்கள். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தவறான முறையில் மக்களை வழிநடத்துகின்றார்கள். தேர்தல் காலங்களில் அவர்களுடைய கருத்துக்கள் தேர்தல் முடிவுகளையே மாற்றக்கூடியவையாக உள்ளன. இது இலங்கையில் மாத்திரமின்றி சர்வதேச ரீதியிலும் ஊடக நிறுவனங்களுக்கு அப்பால் சென்று நிறுவனங்கள் பணி செய்கின்றவர்களை மக்கள் பின் தொடர்கின்ற ஒரு நிலை சமூக வலைத்தளங்களின் அதீத வளர்ச்சியால் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் இன்றைய காலகட்டத்தில் மத தலைவர்கள் முதல் பகுதி நேர வகுப்புகளை நடாத்துகின்ற ஆசிரியர்கள் வரை, அனேகமானவர்கள் தங்களை பிரபல்யப்படுத்திக் கொள்வதற்காக சமூக வலைத்தளங்களை தவறான முறையில் பயன்படுத்துகின்றார்கள். மேலும் Bots, போலியான கணக்குகள் என்பவற்றை பயன்படுத்தி உண்மையை திரிபு படுத்துகின்றார்கள். பணத்தினை செலவு செய்து இவ்வாறான Campaing களையும் செய்கின்றார்கள்.
இது போன்ற செயற்பாடுகள் காரணமாக உண்மை திரிபு படுத்தப்படுகின்றது. அப்போது ஊடகங்கள் தொடர்பில் மக்களுக்கு காணப்படுகின்ற நம்பிக்கை குறைவடைகின்றது. சில ஆபத்தான சந்தர்ப்பங்களில் ஊடகங்கள் உண்மையை கூறினாலும் அவற்றை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. ‘வருமுன் காப்போம்’ என்பதை விட தற்போது பிரச்சினை முற்றியுயுள்ளது. இதற்கான தீர்வு காலத்தின் தேவையாகவே உள்ளது.
உடனடி fact-check கள் மற்றும் ஊடகவியலாளர்களை சரியான முறையில் வழிநடத்துதல் மற்றும் அவர்களைப் பொறுப்பு கூற வைத்தல் என்பன எதிர்காலத்தில் நிச்சயம் செய்யப்பட வேண்டும்.
அதேபோல் ஊடக நிறுவனங்கள் இயலுமான வரை களத்திற்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து அறிக்கையிடல்களை மேற்கொள்ள வேண்டும். ஆதாரங்களுடன் கூடிய inclusive coverage என்பது தற்போது மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.